Sunday, May 23, 2010

துண்டிக்கப்பட்ட உடல் உறுப்பை மீண்டும் வளர வைக்கும் ஜீன்: விஞ்ஞானிகள் ஆய்வு!

விபத்தில் சிக்கி கை, கால் துண்டிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் துன்பம் கொடுமையானது. இதுபோல் விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடந்துவருகின்றன இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் அஜீஸ் அபூபக்கர் தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

பல்லியின் வால் துண்டிக்கப்பட்டாலும் அது கொஞ்ச நாளில் மீண்டும் வளர்ந்துவிடும். அதுபோல சில உயிரினங்களின் உடல் உறுப்பு துண்டிக்கப்பட்டாலும் அது மீண்டும் வளர்ந்துவிடும். இதுபோலவே பிளானேரியன் எனப்படும் புழுவின் தலை துண்டிக்கப்பட்டாலும் அது இறந்துவிடுவதில்லை. கொஞ்ச நாளில் அதன் தலை வளர்ந்துவிடும். தலை மட்டுமின்றி அந்த புழுவின் மூளை சேதம் அடைந்தாலும் அது மீண்டும் வளர்ந்துவிடும்.

இப்படி வித்தியாசமான உடல் அமைப்பு கொண்ட இந்த புழுவை அடிப்படையாக வைத்து டாக்டர் அஜீஸ் தலைமையிலான குழு ஆய்வுகளை நடத்தியது. பிளானேரியன் புழுவின் உடலில் ஏற்படும் இந்த மாற்றத்துக்கு காரணமான ஜீன் எது என்பதை முதலில் கண்டுபிடித்தனர். “ஸ்மெட் பெர்ப்“ எனப்படும் இந்த ஜீன் தான் துண்டிக்கப்பட்ட தலை, சேதம் அடைந்த முளை ஆகியவற்றையும் மீண்டும் வளர வைக்கிறது என்பதை கண்டுபிடித்தனர்.

தற்போது இது குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் நடக்கிறது. இதே ஜீன் மனித உடலில் உள்ளதா? அல்லது அதுபோன்ற ஜீன் மனித உடலில் செலுத்தப்படும் போது புழுவின் உடலில் நடந்தது போல துண்டிக்கப்பட்ட உடல்உறுப்புகள் தானாகவே வளருமா? என்பது தான் அடுத்தகட்ட ஆய்வுகள் ஆகும்.

இந்த ஆய்வுகள் வெற்றி பெறும் போது உடல்ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு பெற முடியும். விபத்தில் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் இழந்த உடல் உறுப்புகளை சில மாதங்களில் பெறமுடியும்

No comments:

Post a Comment